ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள் இன்று!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் இறுதி நாள் இன்றாகும்.
இதன்படி, ஜனாதிபதி இன்றைய தினம் சீனாவின் முன்னணி உற்பத்தி தொழில்சாலைகளுக்கு செல்லவுள்ளார்.
இதன் ஒரு கட்டமாக வறுமையை ஒழிப்பதற்கு முன்னூதாரணமான சீன கிராமம் ஒன்றையும் ஜனாதிபதி பார்வையிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் சிச்சுவான் பிராந்திய கொமினியுஸ்ட் கட்சியின் செயலாளருடன் இன்றைய தினம் ஜனாதிபதி சந்திப்பை நடத்தவுள்ளார்.
இதேவேளை, இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினாபெக் கனியவள நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று கைச்சாத்தானது.
இந்த ஒப்பந்தத்துக்கு அமைய, ஹம்பாந்தோட்டையில் நாளொன்றுக்கு 2 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தி திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இதற்காக 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த புதிய முதலீடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதுடன் ஹம்பாந்தோட்டையில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பலப்படுத்துமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.