குளிர் காலங்களில் தோலில் ஏற்படும் வறட்சி
சர்க்கரை நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு தோல் சார்ந்த பிரச்சனை ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தோல் வறட்சி குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
பெரும்பாலும் பெரிபெரல் வாஸ்குலர் நோய் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த நாளங்களில் உண்டாகும் மாற்றங்கள், குருதியோட்டத்தை குறைத்து, வறட்சியை உண்டாக்கி, சரும கொலோஜெனை சேதமடைய செய்து தொற்றுக்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
மேலும் ஆட்டோனாமிக் (தன்னியக்க) நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை சுரப்பது தடைப்பட்டு தோல் வறட்சியை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு வறண்ட சருமம் ஏற்பட முக்கிய காரணங்கள்:
கட்டுப்பாடற்ற அதிக ரத்த சர்க்கரை அளவு, குளிர்காலங்களில் காணப்படும் குளிர்ந்த வறண்ட காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம், புகை, மதுப்பழக்கம், மன அழுத்தம், ஹைப்போ தைராய்டிசம், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை. சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்:
சருமத்தை தினமும் ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். செராமைடுகளைக் கொண்ட வாசனை இல்லாத கிரீம் அல்லது களிம்பை பயன்படுத்த வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரை குளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
குளிக்கும்போது ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தவும். டியோடரண்ட் சோப்புகள் மற்றும் வலுவான பாடி வாஷ்களை தவிர்ப்பது நல்லது. குளித்த பின்னர் தோல் ஈரமாக இருக்கும் போதே மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தினால் அது நன்றாக உறிஞ்சப்பட்டு சருமம் நீரேற்றமாக இருக்க உதவுகிறது.
முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கழுவினால் போதும். போதுமான அளவு தண்ணீர் மற்றும் வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, முலாம்பழம் போன்ற நீர்சத்து நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்வது நல்லது.