13ஆவது திருத்தச் சட்டத்தின் மீது கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை

13ஆவது திருத்தச் சட்டத்தின் மீது கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைத் தமிழ் மக்கள் தமக்குக் கிடைத்த உரிமையாகக் கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை.”என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அயகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் , “13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக நாங்கள் என்ன கருதுகின்றோம் என்பதை விடவும் தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதுதான் முக்கியமான விடயமாகும்.

தமிழ் மக்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தைத் தமக்குக் கிடைத்த உரிமையாகக் கருதுகின்றார்கள் என்பதை எம்மால் உணர்ந்துகொள்ள முடிந்துள்ளது.

அதனடிப்படையில்தான் நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை உள்ளீர்த்திருந்தோம். அதுமட்டுமன்றி, 13ஆவது திருத்தச் சட்டம் நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசமைப்பிலும் காணப்படுகின்றது.

அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தவுள்ளதோடு அதனையடுத்து இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

மேலும், தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்கும் விடயமாக 13ஆவது திருத்தச் சட்டத்தையும், மாகாண சபை முறைமையும் கருதுகின்றபோது அதனை அர்த்தபுஷ்டியான நிர்வாகக் கட்டமைப்பாகச் செயற்படுத்திப் பார்ப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

ஆகவே 13ஆவது திருத்தச் சட்ட விடயத்தில் எமது நிலைப்பாட்டை விடவும் தமிழ் மக்களின் நிலைப்பாடே முக்கியமானது. அதேநேரம், தோழர் அநுரகுமார தலைமையிலான அரசானது அனைத்து மக்களின் ஆணையுடனேயே ஆட்சிப் பொறுப்பைப் பெற்றுள்ளது.

இதனால், அது அனைத்து மக்களுக்கான அரசாகச் செயற்படவுள்ளதோடு, மக்கள் நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )