பட்டப் பகலில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி! வெளியான அதிர்ச்சி காணொளி
மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகக் கறுப்பு நிற வேனில் ஏற்றிச் செல்லும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கண்டி – கெலிஓயா பகுதியில் நேற்று காலை 7.45 மணியளவில் இந்த கடத்தல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இஸ்லாமிய மாணவிகள் இருவர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, கருப்பு நிற வேன் ஒன்றில் பின் இருக்கையிலிருந்த இளைஞன் ஒருவன் அந்த மாணவிகளில் ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்ற முற்படுகிறார்.
எனினும் வீதியில் நடந்து சென்ற மற்றுமொரு இளைஞன் குறித்த மாணவியைக் காப்பாற்றப் போராடுகிறார்.
மேலும் அந்த இளைஞன் மாணவியைக் காப்பாற்றுவதற்காக நீண்ட தூரம் வேனில் தொங்கி செல்வதையும் குறித்த சிசிடிவி காணொளியில் அவதானிக்கலாம்.
இதேவேளை, இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வேன் வாடகைக்கு எடுக்கப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாணவியைக் கடத்திய இளைஞன் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞனும் கடத்தப்பட்ட மாணவியும் நீண்ட நாட்களாகக் காதலித்து வருவதாகவும், அப்பெண்ணின் குடும்பத்தினர் அவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கோபமடைந்த இளைஞன் அவரை கடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
18 வயதான கடத்தப்பட்ட மாணவி கம்பளை – மரியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
எனினும் குறித்த மாணவி மற்றும் சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.