10 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினர் நேற்று முன்தினம் (08) இரவு யாழ்ப்பாணம் – காரைநகர், கோவளம் கலங்கரை விளக்கத்தில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடிப் படகைக் கைப்பற்றியதுடன் 10 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.
கைதான மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ். கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.