VAT மற்றும் சமூக பாதுகாப்பு வரிகளை நீக்கி மாணிக்கக் கல் மற்றும் ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்
மாணிக்கக் கல் மற்றும் ஆபரணத் தொழில் என்பது நம் நாட்டில் விரிவாக்கல் செய்யக் கூடியதொரு தொழில் துறையாகும். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், வரிச் சலுகைகளை வழங்கி, VAT மற்றும் சமூகப் பாதுகாப்பு வரிகளை நீக்கி, மாணிக்கக் கல் மற்றும் ஆபரண பொதிக்கு 200 டொலர் என்ற வகையில் Package வழங்குவதன் மூலம் இதை விரிவுபடுத்தலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
GEM SRI LANKA 2025 – BENTOTA மாபெரும் சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சியை நேற்று (09) தொடங்கி வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பேருவளை சீனங்கோட்டை மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரண வர்த்தக சங்கம் (CGJTA) வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இந்த கண்காட்சியில், இம்முறை 103 கூடகங்கள் அமைந்து காணப்படுகின்றன. இக்கண்காட்சியில் இலங்கையின் முன்னணி மாணிக்க கல் பிரபல வியாபாரிகள், உள்நாட்டு, வெளிநாட்டு மாணிக்க கல் பிரபல ஏற்றுமதியாளர்கள் உட்பட பல துறை சார்ந்த பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்தத் தொழிலின் நிகர இலாபத்திற்கு வரி விதிக்கப்படக் கூடாது. எமது நாட்டில் இந்தத் துறையை மழுங்கடிப்பதற்குப் பதிலாக இத்தொழிற் துறையை முன்னேற்றுவதற்குச் சாதகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, திறமையான கைவினைஞர்களை உருவாக்கி, ஏற்றுமதித் தொழிலாக இதனை மேலும் முன்னேற்றுவதற்கு அதிகபட்ச சலுகைகளை வழங்க வேண்டும்.
எனவே, மாணிக்கக் கல் மற்றும் ஆபரணத் தொழிலுக்கு நேர்மறையான முற்போக்கான குறுகிய கால வேலைத்திட்டமொன்றை வகுத்து அதனைச் செயல்படுத்தி, இத்தொழிலை மேலே கொண்டு வர முடியும். ஹொங்கொங் மற்றும் தாய்லாந்தை விஞ்சும் வகையில் எமது நாட்டின் மாணிக்கக் கல் மற்றும் ஆபரணத் தொழிலை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தமதுரையில் தெரிவித்தார்.