பெண்ணின் உடல் அமைப்பு குறித்து கமெண்ட் செய்வது பாலியல் துன்புறுத்தல் குற்றம்
பெண்ணின் “உடல் அமைப்பு” குறித்து கமெண்ட் அடிப்பது தண்டனைக்குரிய பாலியல் துன்புறுத்தல் குற்றம் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தன் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள மாநில மின்சார வாரிய (கேஎஸ்இபி) ஊழியர் இருவர் அளித்த மனு மீதான விசாரணையில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஏ பத்ருதீன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்ட அந்த ஊழியர் மீது சக பெண் ஊழியர் புகார் அளித்திருக்கிறார். அந்த ஊழியர் தனக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.
உங்கள் உடல் அழகாக உள்ளது போன்ற ஆட்சேபனைக்குரிய செய்திகள் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை அந்த ஊழியர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து பொலிஸில் புகார் அளித்த பிறகும், அந்த ஆண் ஊழியர் தொடர்ந்து ஆட்சேபனைக்குரிய மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்
குற்றம் சாட்டப்பட்டவர் மீது IPC பிரிவுகள் 354A (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 509 (ஒரு பெண்ணை அவமதித்தல்) மற்றும் பிரிவு 120(o) (விரும்பத்தகாத அழைப்பு, கடிதம், கடிதம், செய்தி மூலம் தொடர்பு கொள்ளுதல்) உள்ளிட்ட கேரள போலீஸ் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஒரு நபருக்கு அழகான உடல் அமைப்பு உள்ளது என்ற குறிப்பிடுவது பாலியல் துன்புறுத்தல் என்ற வரம்பிற்குள் வராது என்று குற்றம்சாட்டப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
ஆனால் அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் தன்னைத் துன்புறுத்தும் வகையிலும் மற்றும் பாலியல் ரீதியாக தூண்டும் நோக்கத்துடனும் இருந்ததாக அரசுத் தரப்பும் பெண்ணும் வாதிட்டனர்.
அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட கேரள உயர்நீதிமன்ற நீதிபதி, ஐபிசியின் பிரிவுகள் 354A[ பாலியல் துன்புறுத்தல்] கீழ் உடல் அமைப்பு குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் கூறுவது அடங்கும் என்று கூறி வழக்கை ரத்து செய்யகோரிய குற்றம்சாட்டப்பட்டவரின் மனுவை தள்ளுபடி செய்தார்.