கசிப்பு விற்பனை செய்த இருவர் கைது
மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அத்தோடு மோட்டார் சைக்கிளையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (08) நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தையில் சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினரினால் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினருக்கு இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினைப் பின்தொடர்ந்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு அதிகாரிகள் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி மேற்கொண்ட சோதனையின்போது 41 வயது மற்றும் 34 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்களிடமிருந்து 4000 மில்லி லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரணதுங்க தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான சார்ஜன் அநுர, சார்ஜன் அசோக்க உள்ளிட்ட அதிகாரிகளும் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், சம்மாந்துறை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.