வாடகைத்தாய் முறை என்றால் என்ன ?
குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான நடைமுறை சரோகசி (Surrogacy) எனப்படும் வாடகைத்தாய் முறை ஆகும். வாடகைத்தாய் முறையில் தம்பதிகள் பலரும் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர்.
வாடகைத்தாய் என்பது ஒரு பெண், தன் உடல் திறனால் குழந்தை பெற முடியாத நிலையில், அவர்களுக்காக இன்னொரு பெண் கர்ப்பத்தை சுமந்து குழந்தை பெற்றுத் தருவதாகும்.
இதை மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு பெண்ணின் குழந்தை வளருவதற்கு மற்றொரு பெண்ணின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுப்பதாகும்.
அதாவது சில பெண்களுக்கு கர்ப்பப்பையே இருக்காது. சில நேரங்களில் அவர்களுக்கு கர்ப்பப்பை இருந்தாலும் கூட அது சரியாக செயல்படாத நிலையில் இருக்கும்.
ஒருவேளை கர்ப்பப்பையில் செயல்பாடு இருந்தால் கூட அதில் சரியான முறையில் குழந்தை வளர்வதற்கு தேவையான சூழல்கள் இல்லாத நிலை இருக்கும்.
இந்த சூழ்நிலையில் அவர்கள் தங்களுடைய மரபணு வழியிலான குழந்தையை வளர்த்து பெற்றெடுப்பதற்கு ஒரு வழிமுறைதான் வாடகைத்தாய் என்பதாகும்.
இந்த வாடகைத்தாய் முறையில் எந்த தம்பதிக்கு வாடகைத்தாய் வேண்டுமோ, அவர்களை கமிஷனிங் தம்பதி என்று சொல்கிறோம். அதாவது அவர்கள் தான் அந்த குழந்தைக்கு தாய், தகப்பன்.
வாடகைத்தாய் என்பவர் கர்ப்பப்பையை மட்டும் தான் இந்த குழந்தைக்கு கொடுப்பார்.
எனவே இந்த குழந்தையின் மரபணு எல்லாமே அந்த தம்பதியினருடையது தான்.
அந்த தம்பதியின் முட்டையையும், விந்தணுவையும் சேர்த்து கருவாக்கம் செய்து, அந்த கருவை வேறொரு பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து குழந்தை பெற்றெடுக்கும் முறைதான் வாடகைத்தாய்.
இந்த வாடகைத்தாய் முறை என்பது, ஐ.வி.எப். சிகிச்சை அளிக்கத் தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகவே பலவிதமான ஆலோசனைகள், விமர்சனங்கள், விவாதங்களுக்கு உட்பட்டதாகவே உள்ளது.
ஏனென்றால் வாடகைத்தாய் முறையில், குறிப்பாக குழந்தை தேவைப்படுகிறவர்கள் மட்டும் இல்லாமல், சில சமூக காரணங்களுக்காகவும், பிரபலங்கள் என்ற முறைகளிலும், சிலர் தாங்கள் குழந்தை பெற்றால் தங்கள் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும், அல்லது அந்த கர்ப்பத்தை சுமப்பதால் தங்களின் வாழ்க்கை பாதிப்படையும் என்பது போன்ற சூழ்நிலைகளால் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.