வரலாற்றுச் சாதனை படைத்த பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த இருபதுக்கு 20 தொடரைத் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது.
இதில் நாணயச் சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சைத் தேர்வு செய்தது. மழை காரணமாகப் போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்து ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ஓட்டங்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ஓட்டங்களில் ஆட்மிழந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், யான்சென், போர்டுயின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 42 ஓவரில் 271 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் டக்வொர்த் லிவிஸ்(DLS) முறையில் 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சயீம் அயூபுக்கு அளிக்கப்பட்டது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே ஒருநாள் தொடரில் வெள்ளையடிப்பு செய்த அணி என்ற வரலாற்றுச் சாதனை படைத்தது பாகிஸ்தான்