புதிய அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தில் அரசியல் இலஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது, அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
மேலும் அவர், ”இந்த வருடத்தில் 361மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னதாக, இவ்வாறான மதுபான சாலை உரிமைப்பத்திரங்கள் வழங்குவதில் அரசியல் இலஞ்சம் இருப்பதாக சொல்லியிருந்தார்கள்.
அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பலரது சிபாரிசின் அடிப்படியில் ஏராளமான மதுபானசாலைகளுக்கான உருமைப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என சொல்லியிருந்தார்கள்.
அந்த அரசியல் இலஞ்சம் என்ற விவகாரத்தில் தங்கள் பதவிக்கு வந்து மூன்று நாள்களில் வெளிப்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார்கள்.
ஆனால், இரண்டு, மூன்று மாதங்கள் ஆகியும் யார் யாருக்கு உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மாத்திரம்தான் வெளிப்படுத்தியுள்ளனர். இது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.
யாருடைய சிபாரிசில் இந்த உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தினால் தான், அரசியல் இலஞ்சம் வழங்கப்பட்டமை என்பதை உறுதி செய்யமுடியும்.
ஆகவே, லஞ்சம், ஊழல் அனைத்தையும் முற்றுமுழுதாக ஒழித்துவிடுவோம் என்று கூறி பதவிக்கு வந்த இந்த அரசாங்கம். மதுபானசாலை அனுமதிப்பத்திர விடயத்தில் சுற்றுப் பின்வாங்குவதாக தோன்றுகிறது.
ஒவ்வெரு மதுபானசாலைகளும் யாரோ ஒரு அரசியல்வாதியின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதை, அரசாங்க கட்சியே தேர்தலுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது.
அப்படியானால், அந்த பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிடவேண்டும். இதுவொரு பாரதூரமான விடயம். இதனை நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றோம்.
முக்கிய முறைப்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன்னர் கூறிவிட்டு, அதாவது அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பான பாரிய சந்தேகம் ஒன்றை எழுப்புகின்றது. இவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து இந்த தகவல்கள் மறைக்கப்படுகின்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன.” என தெரிவித்துள்ளார்.