பணியின் போது தூக்க கலக்கமா ?
மதிய வேளையில் சிறுதுயில் கொள்வது சிலரின் பழக்கம். அதை அவர்கள் அன்றாட வழக்கமாகவே வைத்திருப்பார்கள். எவ்வளவு நேரம் தொடர்ந்து வேலை பார்த்தாலும், மதியம் சிறிது நேர தூக்கம் இல்லாமல் அவர்களால் தொடர்ந்து இயங்க முடியாது.
ஆனால் அலுவலகப் பணி போன்றவற்றில் இருப்பவர்களுக்கு, மதியம் தூக்கம் வருவது பிரச்சனையை ஏற்படுத்தும். அந்த மாதிரியானவர்கள், மதிய நேர தூக்க கலக்கத்தை எப்படி துரத்தலாம் என்று பார்க்கலாம்…
லேசான, சத்தான உணவு
மதிய உணவின்போது அதிகமான, எண்ணெய் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது மந்தமான உணர்வை ஏற்படுத்துகிறது. தூக்கத்தை அழைத்து வருகிறது. அதற்குப் பதிலாக, புரதம், நார்ச்சத்து நிறைந்த மிதமான அளவு உணவை உட்கொள்ளலாம்.
சாதத்தைக் குறைத்து, பச்சைக் காய்கறிகள், சாலட் மற்றும் பழங்களை மதிய உணவில் கூடுதலாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும், தூக்கம் குறையும்.
டீ,காபி
ஒரு கப் டீ அல்லது காபி பருகுவது. பிற்பகல் தூக்கத்தைத் துரத்த உதவும். ஆனால், உடனடி உற்சாக உணர்வை தோற்றுவிக்கும் இந்த பானங்களை அளவோடு அருந்துவதே நல்லது. காரணம். அதிகப்படியான காபீன், உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி, வழக்கமான இரவு தூக்கத்தை பாதிக்கும்.
சிறிய இடைவெளி
தொடர்ச்சியான வேலை. ஒருவரை சோர்வடையச் செய்யும். அந்நிலையில் தூக்கம் வருவது இயற்கையானது. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 5 முதல் 10 நிமிட இடைவெளி எடுத்துக்கொள்வது. உடலை இயல்பாக்கும். இந்த சிறிய இடைவெளி, நம் மனதை புத்துணர்ச்சியடையச் செய்து தூக்கத்தை விரட்ட உதவும்.
காற்றாட நடப்பது
மதிய நேரம் தூக்கம் அதிகமாக தொந்தரவு படுத்தினால், உடனே காற்றாட வெளியே சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். புதிய காற்றும். லேசான சூரிய ஒளியும் ஒருவர் உடலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். தூக்க கலக்கத்தைப் போக்கும்.
தண்ணீர் குடிப்பது
மதியம் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நமது உடலை நீரேற்ற மாக வைத்திருக்கும், சோம்பலைக் குறைக்கும். அதிக நேரம் தண்ணீர் பருகாதபோது. சோர்வு அதிகரித்து தூக்கம் வரும்.
சிறிது நேர ஓய்வு
மதிய வேளையில் தூக்கத்தை தடுப்பது கடினமாகத் தோன்றினால், வாய்ப்பிருந்தால் சுமார் 10-15 நிமிடங்கள் கண்களை மூடி அறி துயில் ஓய்வு எடுக்கலாம். அதன் மூலம் புத்துணர்ச்சி பிறக்கும். உற்சாகமாக செயல் பட முடியும்.
பொதுவாக, மதிய உணவுக்குப் பிறகு. நமக்கு அலுப்பு,சலிப்பூட்டுவதாகத் தோன்றும் வேலைகளை கொஞ்ச நேரம் ஒத்திவைத்து, விருப்பமான வேலைகளை செய்யலாம். இதனால், மதிய நேர உறக்கம் நம்மை ஆக்கிரமிப்பதை தவிர்க்கலாம்.