தமிழரசுக் கட்சியில் இருந்து  சிலர் விரைவில் நீக்கப்படுவார்கள் !

தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் விரைவில் நீக்கப்படுவார்கள் !

“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவார்கள்.
சிலர் இடைநிறுத்தப்படுவார்கள். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டவர்களை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்குவதற்குப் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கின்றது என மத்திய குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனைப் பொதுச்செயலாளர் எதிர்வரும் நாட்களில் செய்வார்.

வேறு சிலர் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயற்பட்டமை தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். அந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரைக்கும் அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்படுவார்கள்.

கடந்த காலத்தில் அரசமைப்பு உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசுக் கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றது. சில வரைவுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சில வரைவுகளோடு நாங்கள் இணங்கி இருக்கின்றோம். ஆகவே. அது எங்களுடைய நிலைப்பாடு.

அதனைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷவினுடைய காலத்தில் அவர் நியமித்த குழுவுக்கு முன்பாகவும் நாங்கள் சென்று எங்களுடைய நிலைப்பாட்டை எழுத்து மூலமாகக் கொடுத்திருக்கின்றோம். ஆகவே, அது எங்கள் கட்சியினுடைய நிலைப்பாடு. ஆகவே, அவ்வாறான நிலைப்பாட்டோடு ஒத்து வருகின்றவர்கள் இருந்தால் எந்த ஆட்சேபனையும் கிடையாது.

ஆனால், வேறு சிலர் எங்களுடைய கட்சிக்குப் போட்டியாக வேண்டுமென்றே வெவ்வேறு வரைவுகளைச் செய்து சில குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வாறான குழப்பங்களை அந்தக் காலப் பகுதியில் செய்தவர்களோடு, அவர்களுடைய வரைவுக்கு இணங்கிச் செல்ல வேண்டிய அவசியம் நமக்குக் கிடையாது.

தமிழரசுக் கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி. வடக்கு, கிழக்கில் சகல மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்திருக்கின்ற ஒரே ஒரு கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி.

ஆகவே, மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறிச் செயற்பட மாட்டோம். மற்றவர்கள் எங்களோடு எங்களுடைய நிலைப்பாட்டோடு இணைந்து செயற்படுவதற்கு வருவார்களாக இருந்தால் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.” என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )