இரண்டு வருடங்களில் 200 இற்கும் மேற்பட்ட மாணவர் பாராளுமன்றங்கள் !

இரண்டு வருடங்களில் 200 இற்கும் மேற்பட்ட மாணவர் பாராளுமன்றங்கள் !

கடந்த இரண்டு வருடங்களில் 200 இற்கும் மேற்பட்ட மாணவர் பாராளுமன்றங்களை நடாத்தி பாராளுமன்றத்தை மக்களிடம் நெருக்கமாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் வகையில், பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற மேல்மாகாண மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், பாராளுமன்றச் செயற்பாடுகள் மற்றும் அதன் பங்கு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்த செயலாளர் நாயகம், பாராளுமன்றம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்தும் முழுமையான விளக்கத்தையும் வழங்கினார்.

மேல்மாகாண மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுக்குப் பாராளுமன்ற முறைமையின் நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில் மேல்மாகாணக் கல்வி திணைக்களம் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் மேல்மாகாண பிரதான செயலாளர் தம்மிக்கா கே விஜேசிங்க, மாகாண கல்விப் பணிப்பாளர் பி.ஆர்.தேவபந்து, மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அனுர பிரேமலால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய மேல்மாகாண பிரதான செயலாளர் தம்மிகா கே விஜேசிங்க குறிப்பிடுகையில், மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக சமூகத்தில் நிலவும், மூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து அது தொடர்பான சமூக உரையாடலை உருவாக்குவதன் அவசியத்தை நினைவுபடுத்தினார்.

அதன் பின்னர், மேல்மாகாண மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வை ஆரம்பிக்கும் வகையில் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனையடுத்து, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மற்றும் அங்கத்தவர்களின் பதவியேற்பு இடம்பெற்றது. பின்னர், மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுக்களால் செயல்படுத்த முன்மொழியப்பட்ட திட்டங்கள் குறித்து சபையில் விளக்கினர்.

இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவ, மாணவியருக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் தலைமையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அதனையடுத்து, மேல் மாகாண மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள் பாராளுமன்ற வளாகத்திற்கு அழைக்கப்பட்டு பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பில் மேலும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது பாராளுமன்றக் குழுக்கள் தொடர்பாக சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேராவினால் விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற முறைமை தொடர்பில் மாணவர்களுக்குக் காணப்படும் கேள்விகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, பாராளுமன்ற முறைமை தொடர்பில் மாணவர்களுக்குக் காணப்படும் சந்தேகங்களும் தீர்த்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மேல் மாகாண வலயப் பணிப்பளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )