தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி

தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி

தென் கொரியாவில் அவசரகால இ ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் கடந்த 3-ந் திகதி அதிரடியாக அறிவித்தார்.

இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய யூன் சுக் இயோல், வட கொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தேசத்தை பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் அவர் , “நமது பாராளுமன்றம் குற்றவாளிகளின் புகலிடமாகவும், சர்வாதிகாரத்தின் வசிப்பிடமாகவும் மாறியுள்ளது. அவர்கள் நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகளை முடக்கி, நமது ஆட்சியை கவிழ்க்க முயல்கின்றனர்” என தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக இராணுவ தலைவர், முக்கிய தளபதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதன் பின்பு, பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கட்டுப்பாட்டை ராணுவத்தினர் தங்கள் கைவசம் கொண்டு வந்து தடுப்பான்களை அமைத்தனர். இதனிடையே ஜனாதிபதியின் இந்த முடிவிற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் அவசரநிலையை நீக்குவதற்கான வாக்கெடுப்பை நடத்தினர்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே உரையாற்றினார்.

அப்போது அவர், “அவசரநிலை நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்ட இராணுவ வீரர்களை நாங்கள் வாபஸ் பெற்றுள்ளோம். பாராளுமன்றத்தின் கோரிக்கையை நாங்கள் ஏற்று, மந்திரி சபை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தன.

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று (07) நடைபெற்றது.

தென் கொரியாவின் ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் 3-ல் இரண்டு பங்கு ஆதரவும், குறைந்தபட்சம் 6 அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகளின் ஆதரவும் தேவை.

இந்த சூழலில், ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆளுங்கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.

இதனால் தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது. அதே சமயம், பொதுமக்களின் போராட்டம் இனி வலுவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்திற்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )