அமெரிக்காவின் உயர் அதிகாரி இலங்கை விஜயம்

அமெரிக்காவின் உயர் அதிகாரி இலங்கை விஜயம்

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர்  டொனால்ட் லு, நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.

டொனால்ட் லுவுடன் அந்நாட்டின் இராஜாங்க திணைக்களத்தின் மற்றுமொரு உயர் அதிகாரியும் தூதுக்குழுவாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் இன்று (05) அதிகாலை 02.55 மணியளவில் டோஹாவிலிருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான KR-662 விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தனர்.

நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதே டொனால்ட் லுவின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டிசம்பர் 10ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

பிராந்திய செழிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு தெற்காசியாவின் முக்கிய பங்காளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இலங்கை வந்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் இந்நாட்டின் புதிய நிர்வாகத்தின் சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு அமெரிக்கா எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது குறித்தும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் இந்த விஜயத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )