சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம் ?
நமது நெஞ்சுப் பகுதியிலுள்ள சுவாசக்குழாயிலும், நுரையீரல் பகுதியிலும் உருவாகும் ஒரு கெட்டியான ஜெல் போன்ற திரவம் சளி ஆகும். மருத்துவ ரீதியாக நோயைத் தடுக்க உடலில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தற்காப்பு செயல்தான் சளி பிடிப்பது.
சளி சிலருக்கு வெறும் தண்ணீர் ஊற்றுவது மாதிரி மூக்கின் வழியாக வெளியே வரும். சிலருக்கு கெட்டியாக இருமும் போது வாய் வழியாக வெளியே வரும். சளிக்கு நிறமும் நாற்றமும் உண்டு. இந்த நிறத்தையும் நாற்றத்தையும் வைத்தே உடலில் என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்பதை ஓரளவு கண்டுபிடித்துவிடலாம்.
சளி திரவ வடிவில் மூக்கு வழியாக வெளியேறினால் இரண்டொரு நாட்கள் இருந்துவிட்டு பின் சரியாகிவிடும். ஆனால் சளி நிறம் மாறி கெட்டியாக வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் வெளியேறினால் சுவாச மண்டலத்தில் அதாவது நுரையீரலில் நோய் இருக்கிறது என்பதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு சளி பிடித்திருக்கிறது என்றால் அவரது குரல் மாறி தொண்டை கட்டிவிடும். வாய் கசப்பு, குமட்டல் இருக்கும். லேசான மூச்சுத்திணறல், தொண்டையை அடிக்கடி செருமி சரிசெய்யும் நிலை ஏற்படும். இவ்வளவு பிரச்சினைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தால் கண்டிப்பாக காய்ச்சல் இருக்கும்.
எனவே சளிதானே பிடித்திருக்கிறது என்று மூக்கைச் சீந்திவிட்டு துண்டில் துடைத்து விட்டு அவ்வளவுதான் என்று நினைக்காதீர்கள். உடனே உங்கள் குடும்ப மருத்துவரை சந்தித்து சளி, காய்ச்சல் ஏற்படுவதற்குண்டான காரணம் என்ன என்று கண்டுபிடியுங்கள்.
வெறும் இருமல் என்றால் உங்களது நுரையீரலுக்குள் தேவையில்லாமல் தெரியாமல் நுழைந்த அந்நியப் பொருட்களை வெளியே தள்ள செய்யப்படும் முயற்சியே இருமல் ஆகும். ஆனால் சளியுடன் இருமல் இருந்தால் அது நோயாகும்.
சளி பிடிக்காமல் இருக்க செய்யவேண்டியவை:
* புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்துங்கள். மாசு, தூசி ஆகியவற்றில் நிற்காதீர்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி, நீச்சல் முதலியவைகளை செய்யுங்கள். அடிக்கடி வெந்நீர் குடியுங்கள்.
* 2 வாரத்துக்கு மேல் இருமல் இருந்தாலோ, சளியின் நிறம் மாறி இருந்தாலோ, சளியுடன் காய்ச்சல் இருந்தாலோ, மூச்சுத் திணறல் இருந்தாலோ, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலோ, உடனே நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணரைச் சந்திக்கவும்.
* நிறமற்ற வெறும் சளி துப்புவது ஆபத்தல்ல. நிறம் மாறிய சளி துப்புவது ஆபத்தானது. உடனடி கவனம் தேவை.