உள்ளாட்சிசபை தேர்தலை பலமான அணியாக எதிர்கொள்வோம்
உள்ளாட்சிசபைத் தேர்தலை பலமான அணியாக எதிர்கொள்வோம். அதற்கான தயார்படுத்தல்களில் தற்போது ஈடுபட்டுவருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர், ‘உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு புதிதாக வேட்பு மனு கோருவதற்கு பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என எமக்கு அறியகிடைக்கின்றது. எனவே, புதிதாக வேட்புமனு கோருவதற்குரிய சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படக்கூடும்.
எனவே, புதிதாக வேட்புமனுக்களை முன்வைக்க தயாராக வேண்டும். கட்சியை காட்டிக்கொடுக்காதவர்கள்தான் எமக்கு முக்கியம். எம்மைவிட்டு சென்றவர்களுக்கு மக்கள் ஆதரவில்லை என்பது அண்மையில் நடைபெற்ற தேர்தலில் உறுதியானது.
வடக்கு, கிழக்கு, 13 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் ஒற்றையாட்சிபோன்ற விடயத்தில் உறுதியான கொள்கையில் இருக்கும் ஒரே கட்சி எமது கட்சியாகும். அந்த கொள்கையுடனேயே பயணிக்கும்.” என தெரிவித்துள்ளார்.