ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள 5 தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர் தெரிவு தாமதமாவதேன் ?
நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் கிடைத்துள்ளதுடன், அதில் ஒரு இடத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சிய 04 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் , பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் ஊடாக உறுப்புரிமையை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு பல தரப்புகளில் இருந்தும் மலையகத்தில் உள்ள மூன்று கட்சிகளிடம் இருந்தும் அழுத்தங்கள் வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.
தொடர்ந்து கடந்த 21ஆம் திகதி ஊடகவியாளர்கள் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா , ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோருக்கு தேசிய பட்டியல் ஆசனங்களை வழங்க கலந்தோலோசித்து வருவதாகவும் மேலும் கொழும்பு வாழ் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு தேசிய பட்டியல் ஆசனமொன்றை வழங்குமாறு பலரும் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) தலைவர் செந்தில் தொண்டமான், கொழும்பு மாவட்டம் மற்றும் மேல்மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதி ஒருவர் தேவை எனவும் அதற்கு பொருத்தமானவர்
மனோ கணேசன் என்றும் அதனால் மனோ கணேசனிற்கு
தேசியப்பட்டியல் வழங்குவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான ஒரு நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்குத் தேசியப் பட்டியல் ஊடாக வாய்ப்பளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் மனோ கணேசன் உட்பட பலரும் வாய்ப்பு கோரியுள்ளனர். உரிய பரிசீலனையின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் எனவும்
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மனோ கணேசன் தேசியப் பட்டியல் ஊடக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் கட்சிக்காக ஆரம்பம் முதல் பாடுபட்ட சிலருக்கும் தேசியப் பட்டியலில் இடம் வழங்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு சஜித் தள்ளப்படுவர்.
மேலும் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி ஒருங்கிணைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்பட வேண்டும் என பல அழுத்தங்கள் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் மனோ கணேசனிற்கு தேசியப் பட்டியலில் இடம் வழங்க 75 சதவீத வாய்ப்பு இருகின்றது.
ஆனால் மனோ கணேசனிற்கு தேசியப் பட்டியலில் இடம் வழங்கினால் கட்சியில் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது
இது இவ்வாறு இருக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் பெண் உறுப்பினர் ஒருவருக்கு இடம் வழங்கப்படுமானால், அதற்கான முழுத் தகுதியும் தனக்கு உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது